மலையகப் பெண்கள்


மலையகமும் மலையக பெண்களின் சமுக பாதுகாப்பும்....👩👩

கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்புலமாகக் ஒரு பெண் இருப்பார் என்பது மறுக்கவியலா உண்மை. பெண்கள் எனும் வகைப்பாட்டுக்குள் சிறுபிள்ளை முதல் இளம் வயது பெண்களும் வயது முதிர்ந்த பெண்களும் உள்ளடங்குவர். பெண்கள்  இன்று பல்வேறு வளர்ச்சிப் பாதைகளில் ஈடுபட்டு சமுதாய வளர்ச்சிக்கும் வித்திடுகின்றனர். இதன் காரணமாக  பெண்கள் அனைவரும் கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லை. பெண்களுக்கு எதிரான சமுக  பாதுகாப்பற்ற நிலையே காணக்கூடியதாக உள்ளது. இதற்கு மலையக சமுகம் விதிவிலக்கல்ல. 

அவ்வாறே பெண்கள் தாம் வசிக்கும் வீடுகள், பணிபுரியும் இடங்கள் (அரச,தனியார் மற்றும் பிற) ,பாடசாலைகள் / கல்வி நிறுவனங்கள் மற்றும் ஒரு இடத்திற்கு வந்து போகும் இடங்கள்(போக்குவரத்து, வழிபாட்டிடம்...) ஆகிய இடங்களில்  சமுக பாதுகாப்பின்மை நிலவி வருகின்றது. 

 மலையக பிரதேசத்தினை பொருத்தவரை குறிப்பாக பெண்களுக்கு எதிரான எவ்வாறான சமுக பாதுகாப்பின்மை விடயங்கள் நிலவிவருகின்றதெனவும் அவற்றிலிருந்து  பெண்களை பாதுகாப்பதற்காக காணப்படும் சட்ட ஏற்பாடுகள் தொடர்பிலும் அதனை நடைமுறைப்படுத்துவத்துவதில் நிலவும் நடைமுறை சவால்கள் குறித்தும் சுருக்கமாக ஆராய்வோம்.

பின்வருவன மலையகத்தில் பிராதானமாக பெண்களுக்கு எதிராக நிலவி வரும் சமுக பாதுகாப்பின்மை நிலைகளாகும்.

1. குடும்ப வன்முறை : சிறுப்பிள்ளைகளை அடித்து துன்புறுத்தல், கணவன் மனைவியை துன்புறுத்தல், கணவரின் குடும்பத்தினரால் பெண்கள் துன்புறுத்தப்படல்.

2. சிறுப்பிள்ளை துஷ்பிரயோகம் : பெண் பிள்ளைகள் குடும்ப உறுப்பினர்களால்,அயலவர்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகுதல். இன்று இது குறிப்பாக பிள்ளைகளை பாதுகாப்பற்ற உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு தாய் பணி நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ள குடும்பங்களில் அதிகம் நிலவுகிறது .

3. தொழில் ரீதியான பாதுகாப்பின்மை : குறிப்பாக தேயிலை தோட்ட தொழிலில் பெண்களுக்கு தங்களது உழைப்புகேற்ற ஊதியத்தினை பெறுவதிலிருந்து வேலை செய்யும் நேரம் வரையிலான அனைத்து விடயங்களிலும் பாரபட்சம் நிலவுகிறது. மேலும் வேலைத்தளம் எனும் போது அதில் மனித உரிமை தராதரங்கள் போதுமானதாக இருக்க வேண்டும். அதாவது வேலை செய்யும் இடம் வேலை செய்வதற்கேற்ப சிறந்த தராதரம் கொண்டிருத்தல் வேண்டும். இதனையே கூட்டு ஒப்பந்தத்திலும் பிரதானமாக வலியுறுத்தப்படுகிறது. உதாரணமாக நாம் ஒரு அலுவலகத்தில் வேலை செய்தால் எவ்வாறான ஒரு சௌகரியமான சூழ்நிலை காணப்படுகிறதோ அது போல தேயிலை தோட்டங்களும் ஒரு வேலைத்தளம் என்ற அடிப்படையில் சௌகரியமான நிலை காணப்பட வேண்டும். வெறுமனே தோட்ட நிருவாகம் பெண்களுக்கு  கொழுந்து கூடைகளையும் பைகளையும் மட்டும் அளித்தல் போதுமான தராதரமாக கணிக்கப்படமாட்டாது. மலைக்காடுகளிலே வேலை செய்யும் பெண்களின் விசேட தேவைக்கருதி மலைக்காடுகளிலே முறையான விதத்தில் மலசலக்கூடங்கள் அமைத்தல் உணவு உண்பதற்கான ஒரு பகுதியினை அமைத்தல் போன்ற இன்னோரான விடயங்கள் தொடர்பில் கவனம் எடுப்பதில்லை. 
அண்மையில் கூட பெருமளவு தோட்ட தொழிலாளி பெண்கள்  குளவி கொட்டுக்கு இலக்காகியிருந்தனர். அதனோடு தேயிலை தோட்ட வேலைத்தளம் முறையான பாராமரிப்பின்மையால் அண்மையில்  சிறுத்தை நடமாட்டம் உட்பட விஷப்பாம்புகளின் வருகையையும் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான அச்சுறுத்தலான நிலையிலே பெண்கள் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் தோட்ட நிருவாகமே பொறுப்புக் கூறும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அது மறுக்கும்  பட்சத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வன இலாகா அதிகாரிகள் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. கல்விரீதியான பாதுகாப்பின்மை : பெரும்பாலும் வறுமையினை காரணம் காட்டி பெண்பிள்ளைகளை பாடசாலை கல்வியிலிருந்து  பெற்றோர்களால் இடை நிறுத்தப்படுவதுடன் குடும்ப சுமைகளை நிர்பந்தித்து தொழிலுக்காக பாதுகாப்பற்ற நகர்ப்புறங்களிற்கு அனுப்பியும் வைக்கப்படுகின்றனர்.
மேலும் பெண்பிள்ளைகள் கற்கும் ஒரு சில மலையக பாடசாலைகளில் முறையான கழிப்பறை வசதி இன்மையால் வாரத்தில் 2/3 நாட்கள் அப்பிள்ளைகள் சுகவீனமுறும் நிலையும் காணப்படுகிறது. 

5. தொழில் தேடி மலையகத்திலிருந்து நகர்புறங்களுக்கு வரும் பெண்களுக்கான பாதுகாப்பின்மை.

6. பெண்களுக்கு சமுக ரீதியான பாதுகாப்பின்மை: உம். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுதல்.மற்றும் பெண்களின் அறியாமையினை பயன்படுத்தி காதல் என்ற போர்வையில் சில நயவஞ்சகர்களினால் பெண்கள் ஏமாற்றபடுதலோடு சில கயவர்களினால் மேற்கொள்ளப்படும் கொடுர காம விளையாட்டுகளும். அதன்பின்னரான அப் பெண்களுக்கு பெருமளவில் பாதக விளைவுகளே ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் பெற்ற குழந்தைகளை தூக்கியெறிந்த தாய்மார்களின் பட்டியலில் இப்பெண்கள் அடங்குவதோடு எதிர்கால ஒளிமயமான வாழ்வினை இழந்துவிடுகின்றனர். இதனோடு பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாதுள்ளதுள்ளமை.

7. சுரண்டல் : குறிப்பாக பெண்கள் தங்களது ஊதியத்தையை தாங்களே முழுமையாக பயன்படுத்த முடியாத குடும்ப சூழ்நிலை. 

8. ஆணாதிக்கம்: இன்றளவும் பெண்கள் கல்வி உட்பட பல்வேறு துறைகளில் முன்னனி வகித்தாலும் அதை மட்டம்தட்டும் ஒரு ஆணாதிக்க சமுகம் இருக்கத்தான் செய்கின்றது. உம் :தேர்தலில் வேட்பாளராக ஒரு பெண் களமிறங்கினாலும் ஆண்களின் 100% வாக்கு பெறுவது கடினமே.

9. பால் நிலை ரீதியான பாரபட்சம் : இது மலையகத்தில் குறிப்பாக தொழிற்துறையில் உண்டு. உதாரணம் தோட்ட தொழில் பெண் ஒருவர் வெளிக்கள உத்தியோகத்தராக நியமிப்பது குறைவே.

எனவே மேற் கூறப்பட்ட விதத்தில் மலையகபெண்களுக்கு எதிரான சமுக பாதுகாப்பின்மை நிலவிவருவதுடன் அவற்றிலிருந்து விலகி  பாதுகாப்பும் நிவாரணம்  பெறுவதற்கு  பின்வரும் குறிப்பான சில சட்ட ஏற்பாடுகள் இலங்கையில் காணப்படுகிறது. (இவற்றோடு சர்வதேச மற்றும் பிராந்திய சட்ட ஏற்பாடுகளும் காணப்படுகிறது)

1. 2005 ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைகளுக்கு எதிரான சட்டம் : இது குடும்பத்தில் பெண்களுக்கும் பெண் பிள்ளைக்கும் எதிரான வன்முறைகளை தடுப்பதுடன் அவ்வாறான வன்முறை தொடர்பில் துன்புறுத்தப்பட்ட பெண் , பிள்ளையின் பெற்றோர் / பாதுகாவலர் , தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின்  அதிகாமளிக்கப்பட்ட அதிகாரி மற்றும் பொலிஸினால் பாதிக்கப்பட்டவர் சார்பில் நீதிமன்றத்திற்கு விண்ணப்பம் செய்யவதினூடாக அதற்கான சட்ட பரிகாரத்தினையும் பெற முடியும்.

2. 1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சட்டம் : சிறுவர் துஷ்பிரோயக்திற்கு எதிராக பாதுகாப்பளிக்கின்றது.

3. இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 12 : சட்டத்தின் முன் யாவரும் சமன் என்பதுடன் எந்த வொரு பிரஜையும் இன, மத, மொழி, சாதி, பால், சொந்தப்பிறப்பிடம் காரணமாக / அத்தகைய காரணங்களுக்காக ஒரங்கட்டப்பட கூடாது என ஏற்பாடு செய்கிறது.

4. 1996 ஆண்டின் 21 ஆம் இலக்க மனித உரிமைகள் சட்டம் : இது பெண்களுக்கான மனித உரிமைகளை பாதுகாப்பளிக்கிறது.

5. இலங்கையின் தண்டனை சட்டக்கோவை பிரிவுகள் 308A, 345 (Penal code Amendment Act No 22 of 1995) : முறையே பிள்ளைகளை துன்புறுத்தல், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தல் என்பன தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதுடன் குறித்த குற்றம் புரிந்த நபரானவர் சட்டத்தினால் தண்டிக்கப்படுவர்.

6. மலையக பெருந்தோட்ட நிறுவனத்தின் கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகள் : இது தொழில் தளத்தில் மனித உரிமை தராதரங்களை பின்பற்றுவது தொடர்பிலான விடயங்களை எடுத்துரைக்கின்றது.

சட்டங்கள் எவ்வாறிருப்பினும் அதன் நடைமுறை பிரயோகம் தொடர்பில் கேள்வி குறியே. உதாரணமாக குடும்ப வன்முறைகள் காணப்பட்டாலும் எமது மலையக சமுதாயம் கீழைத்தேய கலாசாரத்தை பின்பற்றுவதால் (கணவனே கண்கண்ட தெய்வம் என கருதல், துன்புறுத்தலை தாங்கிகொள்ளல்)  அது தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்க தயங்குதவர். எனவே சட்டம் நடைமுறையில் வலுவில்லாத நிலையிலே காணப்படுகிறது.

எனவே சட்டங்களின் பாதுகாப்பினையும் தாண்டி மலையக பெண்கள் தங்களது உரிமைகளை தற்காத்து கொள்ளவும் சமுக பாதுகாப்பினை உறுதிசெய்யவும் பின்வரும் சமுக  விழிப்புணர்வு பரிந்துரைகளை கவனத்தில் எடுக்க வேண்டும்.

1.பெற்றோர் எப்போதும் தம் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக இருங்கள்.

2.குடும்ப வறுமையைக் காட்டி பெண் பிள்ளைகளின் பாடசாலை இடைவிலகளை ஊக்கப்படுத்தாதீர்கள்.

3.மேலும் மலையக பெண்கள் தங்களுடைய சமுகப்பாதுகாப்பின்மை தொடர்பில் சட்டங்களை நாடுவதற்கு முன் பின்வரும் சாத்தியமான சமுக விழிப்புணர்வை கைக்கொள்ள வேண்டியது அவசியம்.

• பெண்கள் எப்போதும் விழிப்புணர்வுடனும் பாதுகாப்பு ஏற்பாடுடனும்  இருக்க வேண்டும். உம் :-குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்களிடத்தில் இரகசியங்களை வெளிவிடாதீர்கள் (சொந்த சுயவிபரம் தெளிவுபடுத்தல், நகை பணம் வைத்திருத்தல் தனிமையாக இருப்பதை குறிப்பிடல்)
• பணி இடங்களில் பாதுகாப்புடன் இருக்க விழிப்புணர்வுடன் இருங்கள்.
• விஷம நோக்கத்துடன் வருபவர்களை சமாளிக்க தற்காப்பு கலையை கற்றிருத்தல் பயனுடையது.

எனவே பெண்களின் முக்கியத்துவம் கருதி ஒவ்வொரு மலையக சமுதாயத்தினரும் மலையக பெண்களின் சமுக பாதுகாப்பினையும் உரிமைகளையும் உறுதி செய்ய பொறுப்புணர்வுடனும் கூட்டாகவும் முன்வர வேண்டும். பெண்கள் போற்றப்படும் பூமியை சிறந்த பூமி! 
(விமர்சனங்கள், கருத்துக்களுடன் கூடிய பரிந்துரைகள் ஏற்கதக்கது)


Comments

Legal Draftmen's Department of Sri Lanka

Dissolution of the Provincial Council by the Governor- Writ of Certiorari and Prohibition

Sri Lankan Legal System

Water pollution (Environmental law )