பசுமையான உலகிற்கு இளைஞர்களின் பங்களிப்பு
பசுமையான
உலகிற்கு இளைஞர்களின் பங்களிப்பு
“தடைகள் வெற்றியின் புதையல், தடங்கல் வெற்றியின் தடங்கள்” இவ்வரிகளை மெய்ப்பித்து தடைகளையும்,
தடங்கலையும் சாதனைகளாக மாற்றக் கூடிய வல்லமை பெற்றவர்க்கள் இளைஞர்கள் . பொதுவாக
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் வளர்ச்சிக் கூறுகளின் நிலைத்த தன்மைக்கும் உந்து
சக்திகளாக பல்வேறு காரணிகள் அறியப்பட்டாலும் அவற்றுள் முதன்மையானது மட்டுமல்ல
தவிர்க்க முடியாத சக்தியாகவும் முன்னிற்பது அந்நாட்டின் இளைஞர்கள் ஆவர்.
புதிய சிந்தனைகள், மேம்பட்ட திறன்கள், புதுமைகளை
உள்வாங்கும் நிலை, தளராத முயற்சி, வளர்ச்சி நோக்கிய இலக்கு, நவீன உத்திகளைக்
கையாளுதல் போன்ற எண்ணற்ற பரிமாணங்கள் இளைஞர்களின் தகுதியையும் தரத்தையும்
உயர்த்திப் பிடிப்பதால் அவர்களை விலக்கி வைத்து விட்டு வளர்ச்சியை முன்னெடுத்துச்
செல்வது இயலாததாகும். எனவே தான் நூறு ஆண்டுகளுக்கு முன்பே இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலம் அவர்களின்
கைகளில் தான் நாடு உள்ளது என்று இளைஞர்களின் சக்தியை உலகிற்கு உணர்த்தினார் சுவாமி
விவேகானந்தர்.
இளைஞர்களின் பங்களிப்பும், மாறுபட்ட அணுகுமுறையும் உலகின்
வளர்ச்சிப் போக்கினை தீர்மானிப்பதற்குப் பேருதவியாக இருந்தால் இளைஞர்களின்
முன்னேற்றத்திற்கேற்ப உலக நாடுகளின் வளர்ச்சி விரைவுபடுத்தப்படும் . அந்த வகையில்
இளைஞர்கள் ஒரு நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வளர்ச்சித் தூதுவர்களாக கருதப்படுகின்றனர். எதிர்காலம்
மட்டுமன்றி நிகழ்கால தேவைகளையும் கருத்தில் கொண்டு வளர்ச்சி சமத்துவத்தைப்
பரவலாக்குவதற்கான செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் வளர்ச்சிப்
பங்காளிகளாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
அறிவு, ஆற்றல், அனுபவம்,துணிவு போன்றவற்றின் அடிப்படையில்
வளரும் நாடுகளிலும் கூட இளைஞர்களின் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம்
பெறுவதால் மாற்றங்களுக்கு வித்திடும் இன்றைய உலகில் இளைஞர்கள் மாற்று
சக்திகளாகவும் உருவாகி நிற்கின்றனர்.
உலகில் சில நாடுகள் தன் மக்கள் தொகையில் கணிசமான அளவு இளைஞர்களை வரப்பிரசாதமாகப்
பெற்றுள்ளது. வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் உலக அரங்கில் முக்கிய இடத்தை
பெற்றுள்ள நாடுகளின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பது, வளர்ச்சி சார்ந்த நிகழ்வுகளில் இளைஞர்கள்
ஈடுபடுவதும் அவர்களின் உறுதி மிக்க பங்களிப்பும் தான்.
இவர்களின் ஈடு இணையற்ற, நேரடியான மற்றும் மறைமுகமான
பங்களிப்பால் உலக நாடுகளின் சவால்களையும், சறுக்கல்களையும் எதிர் கொண்டு அதற்கான
சரியான தீர்வுகளைக் கண்டறிந்து சமூக, பொருளாதாரத் தளத்தில் வளமான பாதையில்
பயணித்து வருகின்றது.
எனவே ஒவ்வொரு நாட்டிலும் அங்கு நிலவும் சூழ்நிலைக்கேற்ப அந்நாட்டின்
வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு இன்றியமையாததாக உள்ளது.
தகவல் தொழில்நுட்ப புரட்சியைத் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளத்
தவறிவிடும் நாடுகள் பின்தங்கிய நாடுகளாகவே இருக்கும் என்று ஒரு காலத்தில்
கருதப்பட்டது. ஆனால், இன்று அந்நிலை மாறி எந்தவொரு நாடு இளைஞர்களின் ஆற்றலை பயன்படுத்தத்
தவருகின்றதோ அல்லது திட்டமிடாமல் தவறான வழிகளில் பயன்படுத்திட முயலுகின்றதோ அது
வளர்ந்த நாடுகளின் பட்டியலை எட்டிப் பிடிக்க முடியாது என்பதும் தொடர்ந்து
வளர்ச்சிப் பாதையில் பயணிக்க முடியாது என்பதும் வெட்ட வெளிச்சமாகின்றது.
இளைஞர்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையினுடைய வரையறைப்
பற்றி நோக்குகையில் 15 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவர்களை இளைஞர்கள் என ஐ.நா சபை
வரையறை செய்துள்ளது. உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கினர் இளைஞர்களாவார். இதில்
பெரும்பாலானோர் வளரும் நாடுகளில் உள்ளனர். இத்தகைய வலிமை படைத்த இளைஞர்களை
அதிகாரப்படுத்தி அதன் மூலம் எதிர்பார்ப்பிற்கேற்ப உறுதியான கட்டமைப்பை அனைத்து நிலைகளிலும் உருவாக்க முடியும் என்று ஐ.நா சபை நம்பிக்கை
தெரிவிக்கின்றது. நாளைய சமுதாயத்தின் தூண்களாக வருங்கால தலைவர்களாக அறியப்படும்
இன்றைய இளைஞர்களின் செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்துவதன் மூலம் மேம்பட்ட சமுதாயத்தை
உலகத் தரத்தில் ஏற்படுத்த முடியும்.
குறிப்பாக எந்த துறையாயினும் இளைஞர்களின் சிந்தனைகள், உறுதிமிக்க
உழைப்பு, புத்தாக்க முயற்சி ஆகியவை குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கி
இருக்கின்றது. இவ்வாறு இளைஞர் சக்தி எந்தச் சூழ்நிலையில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது
என்பதைப் பொறுத்து தனிநபர் மேம்பாடு மட்டுமன்றி நாட்டின் இலக்கு சார்ந்த
முயற்சிகளும் தீர்மானிக்கப்படுகின்றன. அத்தகைய முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு அரசுகளும்
தங்களின் பங்களிப்பைச் செலுத்துகின்றன.
பசுமையான உலகினை கட்டியெழுப்பும் நோக்கில் பல்நோக்குடன்
உழைப்பினை வழங்கிக் கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களின் மேம்பாட்டிற்கு அரசின்
முயற்சிகளும் பெரும் பங்காற்ற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாட்டின் இளைஞர்களை
மனதில் கொண்டு நம்பிக்கைக்கான புதிய சூழலை உருவாக்கிடவும் வளர்ச்சித் தளங்களில்
நாடு புதிய உச்சத்தை எட்டுவதற்கும் அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களையும் ஊக்குவிப்பு
நடவடிக்கைகளையும் செயல்படுத்த வேண்டும்.
எதிர்கால தலைமுறையின் தூண்களாகக் கருதப்படும் இளைஞர்கள்
சமூகம், மக்கள், நாடு ஆகியவற்றின் மீது அக்கறையுடனும் ஈடுபாட்டுடனும் செயல்படுவதால்
சமூகத்தின் வளர்ச்சிக்கான நேர்மறைச் சூழல் உருவாகும். இளைஞர்கள் தங்களது தனித்
திறன்களை தயக்கமின்றி வெளிப்படுத்தி உலக நாடுகளின் வளர்ச்சிக்கான சூழலை
உருவாக்கிடவும் அதனைத் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான வழிகளில் பாதுகாத்திடவும் சில
மேம்பாட்டு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளல் அவசியமாகின்றது.
இன்றைய இளைஞர்களைப் பண்படுத்தும் பணியை குறிப்பிட்ட
சிலருக்கு ஒதுக்கிவிட்டு மற்றவர்கள் வேடிக்கை பார்க்க இயலாது. நம் பங்கிற்கு ஏதாவது
செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
உலக நாகரிகத்தின் சிகரத்தைத் தொட்ட ரோமானியப் பேரரசின்
வீழ்ச்சிக்கான காரணங்களாக இளைஞர்கள் ஆடம்பரங்களிலும் கேளிக்கைகளிலும் மூழ்கி அறிவுசார்
சிந்தனைகளையும் உழைப்பையும் இழந்து தான் என்று வரலாறு சுட்டுகின்றது. எனவே
தற்காலச் சூழலில் இளைஞர் சக்தி எந்த நிலையில் இருக்கின்றது? எவ்வாறு
பயன்படுத்தப்படுகின்றது என்பதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.
நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இளைஞர்கள் தங்களின்
தனித் திறன்களை இழந்துவிடாமலும் இருக்கும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் முறையான
கண்காணிப்பு தொடரும் பட்சத்தில் அவர்கள் வளர்ச்சிக்கான மாற்று சக்திகளாக அடையாளம் காணப்பட்டு
உலகினை திறன் மிக்கதாக மாற்ற முடியும்.
super
ReplyDelete